×

அதிமுக-பாஜ மோதலை திசை திருப்பவே சோதனை திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக-பாஜ மோதலை திசை திருப்பவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே இதுபோன்ற வேலைகளை ஒன்றிய பாஜ அரசு செய்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். தகவல் அறிந்ததும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் திரண்டனர்.

அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவை நோக்கி சேலத்தில் பல கேள்விகளை தொடுத்தார். அந்த கேள்விகளுக்கு அமித்ஷாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. மாறாக சென்னையிலும், வேலூரிலும் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு பேசி சென்றிருக்கிறார். அதை தொடர்ந்து, அதிமுக கட்சி தலைவர்களை பற்றி, அண்ணாமலை பேசிய பேச்சு ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக ஆக்கப்பட்டு பாஜ-அதிமுகவுக்கு இடையேயான மோதல் கடந்த இரண்டு நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

இதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக ஆட்சியிலே ஊழல் நடைபெற்றது என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனையிடப்படுகிறது. இந்த ரெய்டுக்கு ‘காஷ் ஆப் ஆக்‌ஷன்’ என்று சட்டரீதியில் சொல்வார்கள். இன்றைக்கு, செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு என்று சொன்னால், திமுக ஆட்சியிலே ஊழல் நடைபெற்றது போல ஒரு செய்தியை பரப்ப நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மனித உரிமையை மீறக் கூடிய வகையில் இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஒரு மனிதர். அவரது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவரை எங்கள் முன்னால் ஆஜர்படுத்துங்கள் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிவோடு வேண்டுகோள் விடுத்தோம்.

மேலும் அவர் இங்கே வரட்டும் நாங்கள் பார்த்துவிட்டு போகிறோம் என்று சொன்னோம்.அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே திட்டமிட்டு திமுக மீது ஒரு அவப்பெயரை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த ரெய்டு நடைபெறுகிறது. அதை எல்லாம் அத்துமீறும் வகையில், தலைமை செயலகத்தில் சென்று ரெய்டு பண்ணுகிறார்கள். அங்கு ரெய்டு நடத்த வேண்டுமானால் தலைமை செயலாளர் அனுமதி பெற வேண்டும். ஆனால் அதையும் மீறி இன்றைக்கு ரெய்டு நடக்கிறது. ரெய்டை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. கர்நாடகத்தில் சிவக்குமார் வீட்டில் இப்படி அடிக்கடி ரெய்டு நடத்தினார்கள். அங்கு என்ன ஆனது. சிவக்குமார், ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே இந்த ரெய்டுகளால் ஒரு மனிதனின் புகழை, பெருமையை ஒன்றும் செய்து விட முடியாது என்பதை ஒன்றிய பாஜ அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் உங்களுக்கு 10 அமாவாசை தான் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஆட வேண்டிய ஆட்டம் எல்லாம் ஆடி விடுங்கள். இன்னொரு அரசு வந்தால், இதே நிலைமை உங்கள் மீதும் பாயும். இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அமித்ஷா வந்துவிட்டு போன பின்பு நடக்கிறது என்றால், அதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து ெகாள்ள மாட்டார்களா? அதிமுகவுக்கும், பாஜவுக்கும் நடக்கும் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அது ஒரு நாளும் நடக்காது. இதுபோன்ற ரெய்டுகளில், ஒரு வழக்கிலும் திமுக தண்டிக்கப்படவில்லை. அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவை இழிவுபடுத்த நினைத்தால் அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒரு போதும் அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக-பாஜ மோதலை திசை திருப்பவே சோதனை திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,Senthil Balaji ,AIADMK ,-BJ ,RS Bharati ,CHENNAI ,Minister ,BJP ,DMK ,RS ,Bharati ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு?